27 Nov 2018

கரடி - இது என் கதை ( The Bear : My Story) - எம்.பி. சஹாப்தீன்




சுயசரிதை எழுதும் அளவுக்கு அவ்வளவு பிரபலமானவனா நான்? அல்லது எனது எழுத்துக்களை விரும்பி  வாசிப்போர் எவரும் உண்டா? உணமையில் அப்படி எவரும் இல்லை என்பதே எனது பதிலாக இருக்க முடியும்.. ஏன்?  நான் எனது வாழ்வின் இறுதி அத்தியாத்தில் இருக்கின்றேன் என்பதை நான் அறிவேன். எனது வாழ்நாட்கள் என்னப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எனது நிணைவுகளின் ஆழத்தில் செறிந்திருக்கும் அனுபவங்களை  மீள்படுத்தி அதை வாசித்து கடந்த கால  நினைவுகளை அசை போட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எழுதுகிறேன். இருப்பினும் எனது அனுபவங்களை அறிந்து கொள்ள விரும்பும் எனது நலம் விரும்பிகளும் சிலர் இருக்கலாம். அவர்கள் எனது கதையை வாசிக்க நேரிடுமெனில் அவர்கள் இதுவரை அறிந்திடாத செய்திகள் உள்பட என் வாழ் நாளில் நான் எதிர்கொண்ட சம்பவங்கள், நிகழ்வுகள், விபத்துக்கள் என அனைத்தும் காலங்கள் வாரியாக தொகுக்கபட்டிருப்பதை காணலாம். இது வாசிக்க விரும்புவோருக்கு சுலபமாகவும் இருக்கலாம். மேலும் எனது எழுத்துக்கள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துமெனில் தயவு கூர்ந்து பொருட்படுத்த வேண்டாம் எனக் கோரி  எனது குகைக்குள் உங்களை அழைக்கிறேன்.

குகை – 1 ( 1948 – 1957)
1948 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் 12 ஆம் நாள்… எதேசையாக அன்று ரமலான் மாதம் 27 ஆம் நாளும் கூட… சேது சீமையில், தென் கிழக்கு கடற்கரை நகரான கீழக்கரை …. மழைச்சாரல் விழுந்து கொண்டிருந்த அதிகாலை பொழுதில்… நேரம் 5 மனி இருக்கலாம்… காரிருள் இன்னும் விலகாத தருணம், நகரின் வடக்குப் புறத்தில் பிரசவ வேதனையில் துடித்த ஒரு தாயின் விசும்பல் அண்டை வீட்டார் கூட அறியாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அடை மழையின் ஓசை…இருப்பினும் சிறிது நேரத்தில் தகவல் அறிந்து உதவிக்கு சிலர் வந்தனர்… இறைவனின் அருளால் ஆண் குழந்தை ஒன்று இப்பூவுலகுக்கு வந்து சேர்ந்தது.. தனது தாயை ஒத்த நிறத்தில்… கரடி குடும்பத்தில் அந்த தாய்க்கு மூன்றாவது குழந்தையாக, இரண்டாவது மகனாக பிறந்த அந்த குழந்தை பின்பு சஹாப்தீன் என்ற பெயரால் அழைக்கப்பட்டது… ஆம் அது நானேதான்.. கரடி குடும்ப ஆண் வாரிசுகளில் ஆறாவதாக நான் பிறந்தேன் ( எனது பெரிய தந்தை எம்.எம்.ஏ , எனது தந்தை, எனது சிறிய தந்தை, எம்.எஸ், எனது பெரிய தந்தையின் மகனும் இன்று கரடி குடும்பத்தின் மூத்தவருமான டாகடர். ஃபாரூக், எனது மூத்த சகோதரர். எம்.சி ஆகிய ஐவருக்கு பிறகு ஆறாவதாக எம்.பி. சஹாப்தீன் ஆகிய நான்).

இந்த கட்டத்தில் தொடர்ந்து நீங்கள் இந்த தொடரை வாசிக்கும் முன்பு எங்களது குடும்ப பின்ணனியை குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாக கருதுகிறேன், பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை மகா கவிஞர் சேக்ஸ்பியர் முன்வைக்கிறார்… பெயர் என்பது சிறப்புத்தன்மை வாய்ந்தது அது ஒருவரின் வாழ்வோடு முடிந்து விடுவது அல்ல… அது வாழையாடி வாழையாக வாழும் தன்மை கொண்டது என்ற பதிலையும் அவரே தருகிறார்… எப்படி கரடி என்ற எங்கள் குடும்ப அடையாளம் உருவாகியது?

எனது பாட்டனார் பெயர் முகைதீன், கருத்த நிறமும், அடர்ந்த மயிர்கள் நிறைந்த உடலமைப்பை கொண்டவர் , உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருகருவென முடிகள் நிறைந்த உருவம் கொண்ட இவருக்கு கண் விழிகள் மஞ்சள்தண்மை கொண்டதாக இருந்தது, எனது பாட்டனார் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு கரடி அமர்ந்திருப்பது போல் தோன்றுவதாக கூறி கரடி என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவருக்கு வாய்த்த அவரது மனைவிக்கும் அவருக்கும் நிற விஷயத்தில் பெரும் வேறுபாடு இருந்தது. வசதி வாய்ப்புகள் மிகுந்திருந்த எனது பாட்டனாருக்கு மூன்று ஆண் மக்களும், ஒரு பென் மகவும் பிறந்தனர். அதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் தங்களது தாயாரை போல சிவந்த நிறம் கொண்டவர்கள், அந்த ஒருவர் மட்டும் தனது தந்தையின் நிறத்தையும் உருவ அமைப்பையும் கொண்டிருந்தார். ஆம் அவர்தான் மறைந்த பக்கீர் முஹம்மது… எனது  மரியாதைக்குரிய தந்தை… தொடரும்..